தேர்தலுக்கு 20 பில்லியன் ரூபா நிதி தேவை

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்கு சுமார் 20 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தாம் ஏற்கனவே நாடாளுமன்றத்திற்கும் நிதியமைச்சிற்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2025ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது.

எனினும் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நான்கரை வருடங்கள் நிறைவடைந்ததன் பின்னர் எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரங்கள் உண்டு.

ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் முறைமையை நீக்குவதற்கு பதிலாக உரிய திகதியில் தேர்தலை நடாத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் இராணுவத்துடன் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தியிருந்தார்.

மேலும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கப் போவதாக அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கின்ற வேளையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் வாக்கெடுப்பிலேயே அதனை இல்லாதொழிக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin