ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க திட்டம்

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிப்பது தொடர்பில் அரசாங்க தரப்பினருக்கும் சிவில் அமைப்புகளுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரியவருகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது தொடர்பான விடயத்தை எந்த கட்சிகளும் எதிர்க்க முடியாது என்பது பேச்சுவார்த்தைகளில் கலந்துக்கொண்டுள்ளவர்களின் நிலைப்படாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது சம்பந்தமாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி பெரும்பாலாமான மக்களின் விருப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஜனாதிபதியும் நம்புவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு அடுத்து, சித்திரை புது வருடத்தின் பின்னர் நாட்டிற்குள் ஒரு ஸ்திரத்தன்மை உருவாகும் என சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

இதன் பின்னர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது சம்பந்தமாக சமூகத்தில் ஒரு கருத்து உருவாகத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உட்பட பல கட்சிகள் கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பான வாக்குறுதிகளை வழங்கியிருப்பதால், இந்த கட்சிகள் அதனை எதிர்க்க வாய்ப்பில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழித்து விட்டு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதா அல்லது ஜனாதிபதி தேர்தலில் பின்னர் அந்த பதவியை ஒழிப்பதா என்பது தொடர்பில் ஒரு தெளிவற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனினும் அடுத்து நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் நாட்டில் நடக்கும் இறுதியான ஜனாதிபதி தேர்தலாக இருக்க வேண்டும் என்பது மேற்படி பேச்சுவார்த்தைகளில் கலந்துக்கொண்டுள்ளவர்களின் நம்பிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin