முன்னாள் சுகாதார அமைச்சர்களின் பரிந்துரைகளுக்கு அமைய தரம் குறைந்த ஊசி மருந்துகள் மற்றும் மருந்துகள் அரச வைத்தியசாலைக்காக இதற்கு முன்னரும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துக்கொள்ள குற்றவியல் விசாரணை திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதனடிப்படையில், இது சம்பந்தமான தகவல்களை அறிந்துக்கொள்ள அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் உயர் மட்ட அதிகாரி ஒருவரிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். சுமார் ஏழரை மணி நேரம் இந்த அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் முன்னாள் சுகாதார அமைச்சர்களின் கீழ் கடமையாற்றிய முன்னாள் உயர் அதிகரிகளிடமும் வாக்குமூலங்களை பெற நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிகாரிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், தேவையேற்பட்டால்,முன்னாள் சுகாதார அமைச்சர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்படும். இதனை தவிர கடந்த காலத்தல் இலங்கை இறக்குமதி செய்யப்பட்ட ஊசி மருந்துகள் மற்றும் ஏனைய மருந்துகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வும் செய்யும் நடவடிக்கைகளையும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
போலி ஆவணங்களை தயாரித்து, தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை இறக்குமதி செய்து, அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்ததன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமையை உருவாக்கியமை சம்பந்தமாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அத்துடன் முன்னாள் அமைச்சர் கெஹெலிய சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மருந்து இறக்குமதி சம்பந்தமான ஆவணங்களை ஆய்வு செய்ய குற்றவியல் விசாரணை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் பிரச்சினைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்தின் அட்டை பெட்டி மற்றும் ஸ்டிக்கர் அச்சிடப்பட்ட இடங்கள் உட்பட மேலும் பல விடயங்களை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன மற்றும் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேகர ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.