இந்தியா – உத்தர பிரதேச மாநிலத்தின் பல்லியா (Ballia) மாவட்டத்தில் கடந்த 25 ஆம் திகதி நடத்தப்பட்ட வெகுஜன திருமணம் நிகழ்வில் 200 இற்கும் மேற்பட்ட தாமதிகள் போலியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பில் சமூக நலத்துறை அதிகாரிகள் உட்பட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தின் வெகுஜனத் திருமணத் திட்டத்தின் கீழ் நடைபெறும் நிகழ்வின் காணொளியானது, பெரும்பாலான மணப்பெண்கள் தாங்களாகவே மாலை அணிவிப்பதைக் காட்டுகின்றது.
இந்த நிலையில், வெகுஜனத் திருமணத் திட்டத்தில் 568 தம்பதிகளுக்கு திருமணம் தடைந்ததாக நம்பப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், 200 இற்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு மணமகள் மற்றும் மணமகனாக நடிப்பதற்கு பணம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்படி, மணமகனாக நடிப்பதற்கு 2,000 ரூபா பணம் தரப்பட்டதாக 19 வயது இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் குழுவொன்று கடந்த 29 ஆம் திகதி அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம், 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சிலர் இம்முறையும் திருமணம் செய்துகொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் உண்மையை மறைத்து திட்டத்தின் கீழ் பயன் பெற்றமை சட்டவிரோதமானது என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சமூக நலத்துறை அலுவலர்கள் விண்ணப்பதாரிகளை ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டியமையே இந்த மோசடிக்கு காரணம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.