பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, தனியார் வங்கியொன்றின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்புச் செய்த பணத்தைக் கரையான் அரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். அதன் போது அவருக்கு ஐந்து லட்சத்து இருபத்தி ஏழாயிரம் அமெரிக்க டொலர்கள் மற்றும் 100 ஸ்டேர்லிங் பவுண் என்பன தேர்தல் நிதியாக கிடைக்கப் பெற்றிருந்தது.
எனினும் அன்றைய ராஜபக்ச அரசாங்கம் குறித்த பணத்தை முடக்கியதுடன், பணச்சலவை சட்டத்தின் கீழ் பொன்சேகாவுக்கு எதிராக வழக்கும் தொடுத்திருந்தது.
இதனையடுத்து குறித்த பணம் தனது தேர்தல் பிரச்சாரங்களுக்காக கிடைத்த அன்பளிப்புப் பணம் என்று சரத் பொன்சேகா சத்தியக் கடதாசி மூலம் உறுதிப்படுத்தி இருந்தார்.
அவ்வாறு முடக்கப்பட்ட பணநோட்டுகள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் பாதுகாப்புப் பெட்டகத்தினுள் கரையான் அரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே தற்போதைய பெறுமதியில் 16 கோடிக்கும் அதிகமான பெறுமதி கொண்ட குறித்த பணநோட்டுக்களை தனக்கு மீண்டும் விடுவிக்குமாறு சரத் பொன்சேகா கடிதம் மூலம் நிதியமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.