ரணிலுடன் எவ்வித அரசியல் கொடுக்கல் வாங்கலும் இல்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எவ்வித அரசியல் கொடுக்கல், வாங்கல்களும் இல்லை என அந்த கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனோ அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தும் தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இல்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூடடணி குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதால்,அது சம்பந்தமாக பொய்யான கதைகளை சமூகமயப்படுத்த சிலர் முயற்சித்து வருகின்றனர்.

சுதந்திரக்கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணியானது நாட்டின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானகரமான ஒன்றாக இருக்கும். இதனால், ஆரம்பிக்கப்பட உள்ள கூட்டணி தொடர்பில் சிலர் பொய்யான கதைகளை பரப்பி வருகின்றனர்.

சுதந்திரக்கட்சியின் தலைமையில் உருவாகும் கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும் என்பதை பசில் அணியை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிந்துள்ளனர்.

இதனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுடன் சுதந்திரக்கட்சி எந்த வித தொடர்புகளும் இல்லை எனவும் துஷ்மந்த மித்ரபால மேலும் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ள புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையிலேயே சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் மேற்படி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin