செங்கடலில் ஹவுதி போராளிகள் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் யேமனில் உள்ள 30க்கும் மேற்பட்ட போராளிகளின் தளங்களை குறிவைத்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஹவுதி போராளிகளின் 13 இடங்களில் 36 தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவுதி போராளிகளின் ஆயுதங்கள் களஞ்சியங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக கூட்டுப்படையினர் கூறியுள்ளனர்.
கடந்த 28 திகதி ஜோர்டானில் உள்ள அமெரிக்க முகாம் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில், மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிகளுடன் தொடர்புடைய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதல்களுக்கு மறுநாள் யேமனில் மீண்டும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய படையினர் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.
சர்வதேச வணிகக் கப்பல்கள் மற்றும் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக யேமனில் 13 இடங்களில் 36 ஹவுதி தளங்களை நாங்கள் தாக்கியதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய கூட்டுப்படையினர் தெரிவித்துள்ளனர்.
ஹவுதி போராளிகள் அமைப்பின் ஆயுத களஞ்சியங்கள், ஏவுகணை கட்டமைப்புகள்,வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார்கள் கொண்ட தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
செங்கடலில் கப்பல்களை தாக்க தயாராக வைக்கப்பட்டிருந்த ஆறு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மீது அமெரிக்கப் படையினர் தனித்தனியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக செங்கடலில் பயணிக்குட் சர்வதேச கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என முதலில் அறிவித்த ஹவுதி போராளிகள் ஏனைய நாடுகளின் கப்பல்களையும் தாக்க ஆரம்பித்துள்ளனர்.
இதன் காரணமாக செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் பணியில் அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.