மத்திய கிழக்கில் அமெரிக்கா பதிலடி தாக்குதலை ஆரம்பித்துள்ளது

அமெரிக்க படையினர் நேற்று ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஈரானின் புரட்சிகர இராணுவ படையின் ஆதரவு பெற்ற போராளிகளுக்கும் சொந்தமான இடங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோர்தானில் அமைந்துள்ள அமெரிக்க முகாம் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக அமெரிக்கா இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஜோர்தானில் உள்ள அமெரிக்க படை முகாம்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதுடன் சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்க படையினர் நேற்று மேற்கொண்ட இந்த பதில் தாக்குதல் பல்வேறு இலக்குகள் மீது நடத்தப்பட உள்ள தாக்குதலுக்கான ஆரம்பமாக இருக்கலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போராளிகளின் கட்டுப்பாட்டு நிலையங்கள், எறிகணைகள், ஏவுகணைகள், ஆளில்லா விமான களஞ்சியங்கள், பாதுகாப்பு தளப்பாட நிலையங்கள், வெடிமருந்து விநியோக மையங்கள் போன்றின் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. 85க்கு மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் பாலைவனப் பகுதிகளிலும் சிரியா-ஈராக் எல்லையிலும் அமெரிக்க படையினர் நேற்று மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் சிரியாவின் அரச ஊடகம் அறிவித்துள்ளது.

ஜோர்தான் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் உடல்கள்,அமெரிக்காவின் டோவர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அந்த உடல்களை ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகள் பார்வையிட்ட சில மணி நேரத்திற்கு பின்னர் சிரியாவின் அரச ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஜோர்தான் தாக்குதல் சம்பவமானது, மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் கடந்த ஒக்டோபரில் போர் ஆரம்பித்த பின்னர், அமெரிக்க படையினர், உயிரிழந்த முதல் சம்பவமாகும்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் ஈரானில் தயாரிக்கப்பட்டது என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin