இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் ”என்றும் ராஜா ராஜாதான்” என்ற இசை நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21ம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த இசை நிகழ்வு கடந்த மாதம் 27 மற்றும் 28 திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது.
எனினும், இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக ஜனவரி 25ம் திகதி உயிரிழந்தார்.
பவதாரணி இதுவரைக்கும் 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளதுடன், பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
பவதாரிணி உயிரிழந்தது இளையராஜா வாழ்க்கையில் ஆற்ற முடியாத சோகம்; நிரப்ப முடியாத வெற்றிடம் என்றே கூறலாம்.
இந்நிலையில், மகள் மறைவால் நிறுத்தப்பட்ட ”என்றும் ராஜா ராஜாதான்” இசை நிகழ்ச்சிக்காக இசைஞானி இளையராஜா மீண்டும் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்காக ஏற்கனவே நுழைவு சீட்டுக்களை பெற்றுள்ள மற்றும் பதிவு செய்துள்ளவர்கள், அந்த நுழைவுசீட்டுக்களையே பயன்படுத்தி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியினை பார்வையிட முடியும்.
மகளை இழந்து வாடும் இசைஞானியின் வருகைக்காக இலங்கையர்கள் காத்திருக்கின்றனர்.