31 MQ-9B ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஆளில்லா தாக்குதல் விமானங்களை (ட்ரோன்) இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தீர்மானம் குறித்து அமெரிக்க காங்கிரஸுக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆளில்லா விமான கொள்வனவு தொடர்பான அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உடன்படிக்கை குறித்த விடயங்கள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உடன்படிக்கையின் அடிப்படையில், சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான MQ-9B ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய ஆளில்லா விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த உடன்படிக்கையானது அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கான முக்கிய சக்தியாக விளங்கும் அமெரிக்க-இந்தியா மூலோபாய உறவை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களை ஆதரிப்பதன் மூலம் அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு நட்பு நாடான இந்தியாவின் பாதுகாப்பை மேம்படுத்த உதவுவதாக பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.