இரண்டு நாட்களுக்கு முன்னதாக சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி இழுவை படகு மற்றும் 6 மீனவர்கள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில் சோமாலிய அதிகாரிகளுடன் இலங்கை இராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யேமனை தளமாகக் கொண்ட ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு எதிராக செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கான அமெரிக்கத் தலைமையிலான நடவடிக்கையில் இலங்கை இணையப்போவதாக அறிவித்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சோமாலிய கடற்பரப்பில் சந்தேகத்திற்குரிய பிற கடத்தல்கள் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் சோமாலிய கடற்கொள்ளையர்கள் மீண்டும் தமது செயற்பாடுகளை தொடங்கியுள்ளனர்.
சோமாலியாவிற்கு கிழக்கே சுமார் 840 கடல் மைல்கள் (1,555 கிமீ), இலங்கையில் இருந்து 1,100 கடல் மைல்கள் (2,040 கிமீ) மற்றும் சீஷெல்ஸுக்கு வடக்கே சர்வதேச கடற்பரப்பில் இலங்கைக் கப்பல் கடத்தப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், “இதுவரை, அவர்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் இல்லை” என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள இலங்கைத் தூதுவர்கள், மீனவர்கள் மற்றும் இழுவை படகுகளை விரைவில் விடுவிக்க சோமாலிய அதிகாரிகளுடன் ஏற்கனவே தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு மற்றும் மீனவர்களை மீட்பதற்கு இந்தியாவின் உதவியையும் இலங்கை நாடியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.