சன நெரிசல் மிகுந்த சாலையில், பச்சைநிற கழுத்துப்பட்டியுடன் செல்லப்பிராணியை போன்று வெள்ளைநிற காரில் அமர்ந்து சிங்கக்குட்டியொன்று சுதந்திரமாக வலம்வரும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த விடயம் தொடர்பில் நேர் மறை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த காணொளி தாய்லாந்தின் பட்டாயா (Pattaya) நகரில் பதிவு செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்தில் சிங்கத்தை வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல என்றபோதிலும், உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டுமென்பது விதிமுறையாக காணப்படுகின்றது.
இதற்கமைய, தாய்லாந்தில் தற்போது 224 சிங்கங்கள் சர்ரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு வீடுகளில் வளர்க்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பின்னணியில், சிங்கக்குட்டியை வைத்து வாகனம் செலுத்திய நபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சொன் புரி (Chon Buri) மாநிலத்தில் உள்ள வீடொன்றில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையில் 4 மாத பெண் சிங்கக்குட்டி மற்றும் மூன்று நாய்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்ததை தாய்லாந்து அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சிங்கக்குட்டியை வைத்திருந்தவர் இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவிக்கின்றனர். இருப்பினும், குறித்த நபர் வீட்டில் இல்லை எனவும், அவருடைய நண்பரே குறித்த காணொளியை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தாய்லாந்து பிரஜை ஒருவரிடம் இருந்து குறித்த சிங்கக்குட்டி விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், சிங்கக்குட்டி விலைக்கு வாங்கப்படுவதற்கு முன்னதாக அதனை பராமரிப்பதற்கான வசதிகள் குறித்த சரிபார்க்க தவறியதால் இந்த பரிமாற்றம் மற்றும் உரிமை சட்டவிரோதமாக கருதப்படுகிறது.
ஆக, அனுமதி இன்றி காட்டு விலங்கை வைத்திருந்த குற்றச்சாட்டை இவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த குற்றத்திற்காக ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் 2,800 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய, சிங்கத்தை வைத்திருந்த இலங்கையர் மீது வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை தாய்லாந்து பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த நபர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.