இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
இது தொடர்பில் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் தமிழ் மக்கள் தங்களது இருப்புக்களை தக்க வைப்பதற்கு அன்றிலிருந்து இன்று வரை தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
அதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பிரகடனமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கான இருப்புகளும், உரிமைகளும் மீறப்பட்டு கொண்டே இருக்கின்றன. காலத்துக்கு காலம் ஆட்சியாளர் மாறுகின்றனர். ஆனால் தமிழ் மக்களுக்கு இன்றுவரை எந்த ஒரு தீர்வு திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.
தமிழ் மக்களுக்கான நல்லிணக்கத்தை பேச்சு மட்டத்திலேயே தொடர்கின்றனர். இதய சுத்தியுடன் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுதர சிங்கள தரப்புக்கள் தயாராக இல்லை .
சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்துவதற்கான ஆதரவினை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,சிவில் சமூகங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கவேண்டும்.
தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தினை சிதைக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றபட்டுள்ளது. இந்த நாட்டிலே ஊடக சுதந்திரத்தை , ஒரு பொதுமகனின் கருத்து சுதந்திரத்தை கூட இந்த அரசாங்கம் பறித்தெடுத்துள்ளது.
உரிமைக்காக போராடுபவர்களை ஒடுக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி தொலைதூர நோக்கோடு அரசு செயற்படுகின்றது.
தமிழர்களுடைய அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை , காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்,வடக்கு கிழக்கில் அத்துமீறி நிகழ்கின்ற குடியேற்ற திட்டங்கள், திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் என்பவற்றை ஒருபோதும் நிறுத்த போவதில்லை
எமக்கான தீர்வு கிடைக்கும் வரை நாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு ஆகவேண்டும் என்பது வரலாற்று உண்மை.
மேலும் கரிநாள் என்பது சிங்கள மக்களுக்கும் பொருத்தமானதே. இன்று சிங்கள மக்களுக்கும் எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்ட வண்ணமே உள்ளது. இதனை அனைத்து தரப்புக்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
சமநேரத்தில் எங்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வை பெற்று தருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் அதனடிப்படையில் 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்கான ஆரம்ப புள்ளியோ முடிவு புள்ளியோ கிடையாது .
13 ஐ நாம் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது.ஆகவே தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காணாது எமது போராட்டங்களையோ போராட்ட வடிவங்களையோ கைவிடப்போவதில்லை என பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்துகின்றோம்.” என தெரிவித்தனர்.