“எப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து, தனது திரைப்படங்கள் மற்றும் இதற விடயங்கள் குறித்து பேசும் நடிகர் விஜய் இன்று திடீரென தேர்தல் குறித்து அதிகளவில் பேசியுள்ளமை தமிழக அரசயலில் புயலைக் கிளப்பியுள்ளது.”
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகின்றார் என்ற தகவல் அண்மை காலமாக தீவிரமாக பேசப்படும் நிலையில், தனது ரசிகர்களையும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் சந்தித்து பேசுவது வழமையாக கொண்டிருந்தார்.
அந்த வகையில் இன்று காலை 9 மணிக்கு பணையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை, விஜய் சந்தித்து பேசியுள்ளார். குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவது குறித்து இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரம் 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் பிரச்சினைகளில் விஜய் மக்கள் இயக்கம் நேரடியாக ஈடுபடுவது, ரசிகர்களையும், தொண்டர்களையும் நிர்வாகிகளாக மாற்றுவது என விஜய் பல்வேறு விடயங்களை பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய கட்சிகளில் காணப்படும் அடுக்குநிலைகளை தமது மக்கள் இயக்கத்தில் ஏற்படுத்துவதற்கும் விஜய் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள் நல்ல செய்தி வரும் என நிர்வாகிகளிடம் விஜய் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது இயக்க உறுப்பினர்கள் செய்த உதவிகளுக்கு விஜய் பாராட்டு தெரிவித்ததாகவும் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் தலைமை அலுவலகம் ஏற்படுத்துதல், இதன் மூலம் குறித்த மாவட்டத்தின் பிரச்சினைகள் தீர்க்க வேண்டும் எனவும், தேர்தலுக்காக தயாராக இருக்க வேண்டும், எப்போது வேண்டுமானாலும் நாம் தேர்தலை நோக்கி செல்லலாம், பதிவு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பணிகளை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் விஜய் கூறியுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மக்களை சந்தித்து தமது கொள்கைகளை பரப்புமாறு விஜய் பணித்துள்ளதாக, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், விஜயின் இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.