ஏ.ஆர். ரஹ்மான் சர்ச்சை – அனுப் ஜலோட்டாவின் அதிரடி கருத்து!
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சமீபத்திய நேர்காணல் மற்றும் அதற்குப் பதிலடியாக பாலிவுட் பாடகர் அனுப் ஜலோட்டா (Anup Jalota) தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்தியத் திரைத்துறையில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளன.
தமக்கு வாய்ப்புகள் குறைக்கப்படுவதாக ரஹ்மான் ஆதங்கப்பட்ட நிலையில், அவரை மீண்டும் மதம் மாறுமாறு அனுப் ஜலோட்டா கோரிக்கை விடுத்துள்ள செய்தி வைரலாகி வருகிறது.
கடந்த 8 ஆண்டுகளாகத் தனக்கான வாய்ப்புகள் திட்டமிட்டு குறைக்கப்படுவதாகவும், படைப்பாற்றல் இல்லாதவர்களே அதிகார மையத்தில் முடிவுகளை எடுப்பதாகவும் ஏ.ஆர். ரஹ்மான் வருத்தம் தெரிவித்திருந்தார். இது திரைத்துறையில் நிலவும் பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.
ரஹ்மானை விட பாரபட்சம் கொண்ட ஒருவரைப் பார்த்ததில்லை என நடிகை கங்கனா ரனாவத் காரசாரமாக விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில் பாடகர் அனுப் ஜலோட்டா வெளியிட்டுள்ள வீடியோவில், “மதத்தின் காரணமாகவே வேலை கிடைக்கவில்லை என்று ரஹ்மான் கருதினால், அவர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறுவது குறித்து யோசிக்கலாம். அப்படி மாறினால் மீண்டும் வேலை கிடைக்குமா என்று பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
அனுப் ஜலோட்டாவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சங்கர் மகாதேவன், கைலாஸ் மேனன் மற்றும் சின்மயி போன்ற திரை பிரபலங்கள் ரஹ்மானின் திறமைக்கும் அவரது மனிதநேயத்திற்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். ரஹ்மான் போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த கலைஞரை மதச் சாயத்திற்குள் அடைப்பது முறையல்ல என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

