அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த கைதி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டபோதும் பெரும் முயற்சியை அடுத்து காப்பாற்றப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 43 வயதுடைய தமிழ் கைதி ஒருவர் முதலையால் தாக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைப் பகுதியில் உள்ள மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதியில் குறித்த கைதியும் இன்னும் சில கைதிகளும், பயிர்ச் செய்கைகளில் இன்று ஈடுபட்டிருந்த போது மூங்கில் புதருக்குள் மறைந்திருந்த முதலை ஒன்று கைதியின் காலைப் பிடித்து மல்வத்து ஓயாவுக்கு இழுத்துச் சென்றதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி, ஒரு கை, கால் மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்து கைதி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற கைதியை முதலை தாக்கியதாக கிடைத்த தகவலை மறுத்த சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பயிர்ச்செய்கையில் நேற்று மாலை ஈடுபட்டிருந்த போதே இந்த முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.