பிரித்தானியாவிலுள்ள உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்துலக இராஜதந்திரக் கட்டமைப்பு ஆகிய தமிழ் தேசிய அமைப்புக்கள் இணைந்து ஒழுங்கமைப்பு செய்துள்ளன.
உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்படும் இந்த எதிர்ப்பு பேரணி பிரித்தானிய பாராளுமன்றம் வரை செல்லவுள்ளது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கோரியே புலம்பெயர் தமிழ் மக்கள் இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.
பிரித்தானியப் பேரரசு இலங்கையை ஒன்றிணைத்த போது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சுமத்துகின்றனர். இதனால் பல தசாப்தங்களாக இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ளதாக தமிழ் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அரசர் III சார்லஸ் மற்றும் உலகத் தலைவர்கள் எங்களுடைய பிரச்சினைக்காக குரல் கொடுக்குமாறும், அரசியல் தீர்வுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றும் அனைத்துலக தமிழ் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி. தமிழ் மக்களை நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்கும் உரிய சிறப்புமிக்க தேசமாக அங்கீகரிக்க சர்வதேச ஒத்துழைப்பை நாடுவதாகவும் தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.