லண்டன் – சிட்னி இடையில் இடைவிடாத விமான சேவை 

லண்டன் – சிட்னி இடையில் இடைவிடாத விமான சேவை

குவாண்டாஸ் (Qantas) நிறுவனத்தின் “புராஜெக்ட் சன்ரைஸ்” (Project Sunrise) திட்டம், விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையவுள்ளது. 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் லண்டன் – சிட்னி இடையிலான இந்த இடைவிடாத (Non-stop) விமான சேவை தொடங்கவுள்ளது.

இதற்காக குவாண்டாஸ் நிறுவனம் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட Airbus A350-1000ULR (Ultra Long Range) விமானங்களைப் பயன்படுத்துகிறது.

10,500 மைல்களுக்கும் அதிகமான இந்தத் தூரத்தைக் கடக்க, விமானத்தில் கூடுதலாக 20,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக 22 மணித்தியாலங்கள் பறக்கும் திறன் கொண்டது.

தூரத்தை ஈடுகட்ட விமானத்தின் எடை குறைக்கப்பட வேண்டும். எனவே, பொதுவாக 300-350 பயணிகள் செல்லும் இந்த விமானத்தில் வெறும் 238 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

20 மணிநேரம் தொடர்ந்து ஒரு மூடிய அறைக்குள் இருப்பது சவாலானது என்பதால், குவாண்டாஸ் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது:

பயணிகள் எழுந்து நின்று உடற்பயிற்சி செய்யவும், தசைகளை நீட்டி (Stretching) ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் பிரத்யேகப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வழக்கமான விமானங்களை விட அதிக இடவசதி (Legroom) வழங்கப்படுகிறது. 40% க்கும் அதிகமான இடங்கள் பிரீமியம் வகுப்புகளுக்காக (First, Business, Premium Economy) ஒதுக்கப்பட்டுள்ளன.

சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் இணைந்து, பயணிகளுக்கு ஏற்படும் நேர மாற்ற களைப்பைக் (Jet Lag) குறைக்க விசேட ஒளி அமைப்புகள் (Lighting) மற்றும் உணவு முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது இந்தத் திட்டத்தின் மீதான மிகப்பெரிய விமர்சனமாகும்.

இடைவிடாத பயணத்திற்காக அதிக எரிபொருளைச் சுமந்து செல்லும்போது, அந்த எரிபொருளைச் சுமப்பதற்கே அதிக எரிபொருள் எரிக்கப்படுகிறது. வல்லுநர்களின் கருத்துப்படி, ஒரு நிறுத்தத்துடன் செல்வதை விட இத்தகைய நேரடிப் பயணம் அதிக கார்பன் வெளியேற்றத்தை (Carbon Footprint) ஏற்படுத்தும்.

எனினும் புதிய தலைமுறை ஏ350 விமானங்கள் பழைய மொடல்களை விட 25% குறைவான கார்பனை வெளியேற்றுவதாகவும், இதற்காக ‘நிலையான விமான எரிபொருளை’ (Sustainable Aviation Fuel – SAF) பயன்படுத்த முயற்சிப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஏர்பஸ் A350 விமானத்தில் வெறும் 6 முதல் வகுப்பு அறைகள் (Suites) மட்டுமே இருக்கும். இதன் வசதிகள் ஒரு சிறிய சொகுசு ஹோட்டல் அறைக்கு இணையானது.

பெரும்பாலான விமானங்களில் இருக்கையே படுக்கையாக மாறும். ஆனால் இதில், ஒரு சாய்வு இருக்கை (Armchair) மற்றும் தனியாக 2 மீற்றர் நீளமான படுக்கை (Flat Bed) என இரண்டுமே இருக்கும்.

ஒவ்வொரு அறைக்கும் உயரமான சுவர்கள் மற்றும் நெகிழ் கதவுகள் (Sliding Doors) இருக்கும். இதனால் பயணிகள் முழுமையான தனிமையுடன் பயணிக்கலாம்.

பொழுதுபோக்கிற்காக 32 அங்குல (32-inch) 4K Ultra HD திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.

இருவர் அமர்ந்து சாப்பிடும் வசதி, தனிப்பட்ட அலமாரி (Personal Wardrobe) மற்றும் கண்ணாடியுடன் கூடிய ஒப்பனை மேசை (Vanity Mirror) போன்ற வசதிகள் உள்ளன.

நேரடிப் பயணம் என்பதால், சாதாரண ஒரு நிறுத்தத்துடன் கூடிய பயணங்களை விட இதன் விலை 20% முதல் 30% வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வகுப்பு (Economy) லண்டன் – சிட்னி இருமார்க்கப் பயணத்திற்கு சுமார் £1,700 – £2,000 (சுமார் 6-7 இலட்சம் இலங்கை ரூபாய்) வரை இருக்கலாம்.

முதல் வகுப்பு (First Class): இதன் விலை ஒரு வழிப் பயணத்திற்கே சுமார் $15,000 – $20,000 (சுமார் 45-60 இலட்சம் இலங்கை ரூபாய்) வரை இருக்கக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin