மலேசியாவின் பினாங்கு மாநிலம் ஜோர்ஜ் டவுன், பத்து உபான் என்ற பிரதேசத்தில் ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பின், 16 வது மாடியில் இருந்து தவறி விழுந்து நைஜீரிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர் தங்கியிருந்த வீட்டை, மலேசிய போதைப் பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று சோதனையிட சென்ற போது, இந்த சம்பவம் நடந்ததாக பினாங்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டின் கதவை பொலிஸார் தட்டிய போது, கதவை திறந்த நைஜீரிய பிரஜை, பொலிஸாரை கண்டதும் கதவை மூடியுள்ளார்.
எனினும், கதவை உடைத்து உள்ளே சென்ற பொலிஸார் அங்கு இருந்த மற்றொரு நபரை கைது செய்துள்ளனர்.
அதன் பின்னர், சம்பந்தப்பட்ட ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பை சுற்றி சோதனையிட்ட போது, ஆண் ஒருவனின் சடலத்தை மீட்டதாகவும் அந்த சடலம் கதவை மூடிவிட்டு தப்பிச் சென்றவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே தொடர்மாடி குடியிருப்பில் மற்றுமொரு வெளிநாட்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனையிடப்பட்ட வீட்டில் இருந்து போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகளை கைப்பற்றியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.