அமெரிக்காவில் இவ்வாண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பிலான போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.
ஜனநாயாக கட்சியில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களம் இறங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. வழக்குகளின் தீர்ப்புகளின் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக சில மாநிலங்களில் அவர் கட்சியின் வேட்பாளர் தெரிவில் போட்டியிடவும் தடைவிதிக்கப்பட்டது.
விவேக் ராமஸ்வாமியை அடுத்து ரான் டி சான்டிஸ்
தென் கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே மற்றும் புளோரிடா கவர்னர் ரான் டி சான்டிஸ் ஆகியோரும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட ஆதரவுக் கோரி வருகின்றனர்.
குடியரசுக் கட்சிக்குள் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் ஆதரவு இருந்து வருகிறது. ரான் டி சான்டிஸ் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தும் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் ரான் போட்டியிலிருந்து விலகினார்.
சில தினங்களுக்கு முன், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட ஆதரவு கோரி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமஸ்வாமி, போட்டியிலிருந்து விலகிய நிலையிலேயே தற்போது ரான் டி சான்டிஸும் வலகியுள்ளார்.
டிரம்ப் பைடனைவிட திறமையானவர்
இதனால் டொனால்ட் டிரம்புக்கான ஆதரவுக் அக்கட்சியில் அதிகரித்துள்ளதுடன், நிக்கி ஹாலே மட்டுமே போட்டியாளராக உள்ளார். போட்டியாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் தெரிவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பதவி விலகல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரான் டி சான்டிஸ்,
“போட்டியிலிருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவு கோரிய பிரசாரத்தையும் நிறுத்தி கொள்கிறேன். குடியரசு கட்சி வாக்காளர்கள் மீண்டும் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாகுவதையே விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
எனக்கும் டிரம்பிற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை விட பன்மடங்கு திறமையும், தகுதியும் உள்ளவர். அவருக்கு என் ஆதரவை முழுமையாக அளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.