இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பயிற்சியாளர் பதவியை ஏற்கப்போவதாக வெளியான தகவலை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜோன்டி ரோட்ஸ் மறுத்துள்ளார்.
இது குறித்து இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததுடன், அந்த செய்தி தொடர்பில் ஜோன்டி ரோட்ஸ் தனது சமூக ஊடகம் வாயிலாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
உள்ளூர் பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு பயிற்சிகளை வழங்குவதற்காக சர்வதேச கிரிக்கெட் வீரர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நேற்று அறிவித்தது.
தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளில் பயிற்சித் திட்டங்களை நடத்துவதும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜோன்டி ரோட்ஸ், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், இலங்கை தேசிய அணியின் முன்னாள் பிசியோதெரபிஸ்ட் அலெக்ஸ் கவுண்டூரி ஆகியோரின் சேவையை பெற செயற்குழு முடிவு செய்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், உள்ளூர் விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இன் இலங்கை கிரிக்கெட்டின் தீர்மானம் குறித்த கட்டுரைக்கு பதிலளித்துள்ள ஜோன்டி ரோட்ஸ் அந்த அறிக்கையை மறுத்துள்ளார்.