டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய கொழும்பு பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் இன்று (16) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
மானெல் உயன, மபுதுகல பகுதியைச் சேர்ந்த ஹாசினி என்ற யுவதியே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த யுவதி காய்ச்சல் காரணமாக கடந்த 06ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 11ஆம் திகதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின், தீவிர சிகிச்சைப் பிரிவில், பரிசோதனை செய்ததில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த யுவதி உயிரிழந்துள்ளார்.
இன்று பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மரணம் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மாதம் யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணத்தில் டெங்கு தொற்று தீவிரமான பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.