நூதன கோரிக்கையை முன்வைத்த மீசாலை மக்கள்

தென்மராட்சி- கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், வீதி புனரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மாகாண ஆளுநருக்கு கடிதமொன்றினையும் பிரதேச மக்கள் அனுப்பிவைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தென்மராட்சி பிரதேச செயலக பிரிவின் ஜே.320 மற்றும் ஜே.321 ஆகிய கிராம சேவகர் பிரிவுக்கு நடுவே அமைந்துள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை மேற்குறித்த இரு கிராம சேவகர் பிரிவில் உள்ள மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பிரதான வீதியாகும்.

பொதுமக்கள் பயணிக்கவே முடியாத நிலையில் பாரிய குழிகளுடன் இவ்வீதி காணப்படுகிறது. பாரிய குழிகள் காரணமாக அதிகளவான விபத்துக்களும் இடம்பெறுகின்றன.

இவ்வீதி கடந்த 18 வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமளிருக்கும் குறித்த வீதியினை புனரமைத்துசெய்து தருமாறு உரிய அதிகாரிகளுக்கு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

இருப்பினும் இதுவரை எந்தவிதமான புனரமைப்பும் செய்யப்படாமல் உள்ளது.

குறித்த வீதியை உடனடியாக புனரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

இவ்வீதி புனரமைப்பிற்காக எமது பகுதியில் வசிக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்து ஒரு நாள் வேதனமான (ஆயிரம் ரூபாவை) சேகரித்து வங்கியூடாக சுமார் 96 ஆயிரம் ரூபாவினை காசோலையாக அனுப்பி வைத்துள்ளோம்.

அப்பணத்தினையும் புனரமைப்பு பணிகளுக்கான செலவு நிதியில் சேர்த்துக் கொள்வதோடு, வீதியின் புனரமைப்பு பணிகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு மீண்டும் கோரிக்கை முன்வைக்கின்றோம்” என தங்களது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றினை மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், குறித்த கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், சாவகச்சேரி பிரதேச செயலர், கொடிகாமம் பிரதேச சபை செயலாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin