ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என நம்பகத்தன்மை வாய்ந்த கருத்துக் கணிப்புகள் மூலம் தெரிய வருவதாக அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
”நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ஆட்சிமாற்றத்தை விரும்பியுள்ளனர். கடந்தகால அரசாங்கங்களால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நாட்டின் அரசியல் தலைமையை மாற்றாமல், இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள முடியாது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பெரும்பான்மையான இலங்கையர்கள் தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டத்தில் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
மக்கள் விரோத முகாம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எவருடனும் தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் தொடர்புகள் கிடையாது. அதனால் மக்கள் எம்மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளனர். நிச்சயமாக அடுத்த எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் சில முக்கியமான நிறுவனங்கள் நடத்தியுள்ள கருத்துக்கணிப்புகள் ஊடாக தெரியவருகிறது.” என்றும் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்