தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற சீனா எதிர்ப்பாளர் வில்லியன் லாய் சிங்-தேவுக்கு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோக்கோ கமிகாவா வாழ்த்து தெரிவித்துள்ளமைக்கு ஜப்பானில் உள்ள சீனத்தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சரின் கருத்தை கடுமையாக எதிர்ப்பதாக ஜப்பானில் உள்ள சீன தூதரகம் இன்று (14) தெரிவித்துள்ளது.
தாய்வான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த நாட்டை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பங்காளி எனவும் முக்கியமான ஒரு நண்பர் எனவும் குறிப்பிட்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கமிகாவா, தனது வாழ்த்தை தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடியாக, அறிக்கை வெளியிட்டுள்ள ஜப்பானில் உள்ள சீனத்தூதரகம்,கமிகாவாவின் கருத்து சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் கடுமையான தலையீடு என எனக் கருதப்படுவதாக கூறியுள்ளது.
பல நாடுகளைப் போல் ஜப்பானுக்கு தாய்வானுடன் உத்தியோகபூர்வ தூதரக உறவுகள் எதுவும் இல்லை. ஜப்பான், சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்த அந்நாடு இதனை நிபந்தனையாக விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாய்வான் நாட்டை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா குறிப்பிட்டு வருவதுடன் அது தனது நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என உரிமை கொண்டாடி வருகிறது.