மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல்போயுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இடம்பெற்ற இந்த விபத்து நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததன் காரணமாக நிகழ்ந்ததாகவும், விபத்து இடம்பெற்றபோது சுரங்கத்தில் 425 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சுரங்கத்திலிருந்து 380 பேர் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சீனாவில் சுரங்க விபத்துகள் வழக்கமானவை எனினும் சமீபத்திய ஆண்டுகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம், வடகிழக்கு ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் ஜிக்ஸி நகரின் புறநகர் பகுதியில் இடம்பறெ்ற சுரங்க விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்தனர்.
அதேவேளை, கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
நிலக்கரி உற்பத்தி மற்றும் நுகர்வில் உலகளவில் முதலிடத்தில் உள்ள சீனா, அபாயகரமான மற்றும் அடிக்கடி நிகழும் சுரங்க விபத்துகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டில் மாத்திரம் 168 விபத்துக்களில் 245 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.