இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் இலங்கை அரசாங்கம் செங்கடலை பாதுகாக்க கடற்படை கப்பலை அனுப்புகின்றது என யாழ். மாவட்ட கிராமிய கடல் தொழில் அமைப்புகளின் சம்மேளன செயலாளர் அன்ரன் செபராசா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளால் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றன. இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்தும் அழிக்கப்படுகின்றது. இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த இரு நாட்டு அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் இலங்கை அரசாங்கம் செங்கடலை பாதுகாக்க இலங்கைக் கடற்படை கப்பலை அனுப்புகின்றது.
இலங்கைக்கு பொருட்கள் கொண்டுவரப்படும் கடலை பாதுகாக்க வேண்டியது முக்கியம் தான். எனினும், மக்களின் வாழ்வாதாரத்தையும் இலங்கை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.
இங்கிருக்கக்கூடிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இந்தியத் தூதரக அதிகாரிகள் எமது பிரச்சினைகளை இந்திய அரசாங்கத்திடம் எடுத்துக்கூறி இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் விரைவில் யாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்வோம்.
இந்திய இழுவைப்படகுகள் வடக்கு மீனவர்களின் வலைகளை அழிக்கின்றது. இதனால் ஒரு வேளை உணவுகூட இல்லாமல் பல மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் அல்லது இலங்கை அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் – என்றார்.