இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் காரணமாக செங்கடலில் கப்பல்கள் பயணிப்பதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. ஹூதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்களை கடத்துவதுடன், தாக்குதல்களையும் மேற்கொள்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படலாம் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் இருந்தே இலங்கைக்கு பெருமளவான கோதுமை மா இறக்குமதி செய்யப்படுகிறது. துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா செங்கடல் வழியாக கப்பல்கள் மூலமே இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது.
செங்கடல் வழியாக பயணம் செய்வதில் தடைகள் ஏற்படுவதால், கப்பல்கள் போக்குவரத்துக்கான கட்டணங்களை வசூலித்தால் கோதுமை மாவின் விலை அதிகரிக்கலாம்.
இன்னும் மூன்று மாதங்களுக்கு தேவையான அளவு கோதுமை மா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சோளம் கையிருப்பில் இருக்கிறது. அதற்குள் செங்கடலில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடிக்கு உலக நாடுகள் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அவ்வாறு இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டால் விலைகள் அதிகரிக்கப்படாது எனவும் அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.