ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் மொஹாலியில் நேற்று (11) ஆரம்பமான முதல் டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பில் அதிகபடியாக மொஹமட் நபி 27 பந்துகளில் 42 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் அதிகபடியாக தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர், 159 ஓட்டம் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 17.3 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 159 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் அதிகபடியாக சிவம் டூபே 40 பந்துகளில் ஆட்டமிக்காது 60 ஓட்டங்களை பெற்றதுடன், போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்டி டி20 தொடரில் இந்தியா 1:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதுடன், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் ஜனவரி 14 இந்தூரில் ஆரம்பமாகும்.
ரோஹித் சர்மா சாதனை
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா ஒரு தனித்துவமான உலக சாதனையை படைத்துள்ளார்.
அதாவது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றி பெற்ற 100 போட்டிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
ரோஹித் சர்மா இந்திய அணிக்காக தம்முடைய கிரிக்கெட் வாழ்வில் இதுவரை 149 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 100 முறை இந்தியா வென்றுள்ளது. அந்த வகையில் 100 வெற்றிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த வரிசையில் 2 ஆவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் (86 வெற்றிகள்) உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.