ஏமனில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா,பிரித்தானியா

ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு இறுதி முதல் செங்கடலில் பயணம் செய்த அனைத்துலகக் கப்பல்களைத் தாக்கினர்.

இதற்கு பிறகு முதல்முறையாக அமெரிக்காவும், பிரித்தானியவும் பதிலடி தாக்குதலை தற்போது ஆரம்பித்துள்ளன.

தலைநகர் சனா உட்பட ஏமன் முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை ‘அமெரிக்க-யூத-பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு’ என்று அது குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவும் பிரிட்டனும் அவுஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் ஆதரவோடு ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

“செங்கடலில் அனைத்துலகக் கப்பல்களை ஹூதி தரப்பினர் தாக்கியதற்குப் பதிலடி இது. வரலாற்றில் முதல்முறையாக அவர்கள் கப்பல்கள் மீது ஏவுகணைகளைப் பாய்ச்சித் தாக்கியது குறிப்பிடத்தக்கது

அந்தத் தாக்குதல்கள், அமெரிக்க அதிகாரிகளுக்கும் கடலோடிகள், பங்காளித்துவத் தரப்பினருக்கும் ஆபத்து விளைவித்ததுடன் வர்த்தகம், கடலில் பயணம் செய்வதற்கான சுதந்திரம் ஆகியவற்றையும் ஆபத்துக்குள்ளாக்கின.

மக்களையும் தடையற்ற வர்த்தகத்தையும் காக்கும் பொருட்டு கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளவும் தாம் தயங்கப் போவதில்லை ” என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பமாகிய இஸ்‌ரேல்-ஹமாஸ் போர், மத்திய கிழக்கு வட்டாரத்தில் மேலும் பரவுவதை அண்மைய தாக்குதல் காட்டுவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin