தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் சூழ்நிலையை அரசாங்கமே உருவாக்கியது

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காது நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நடவடிக்கையாக வடக்கின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்களிலேயே ஈடுப்பட்டார் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் அந்நிய செலாவணியை சேமிப்பதற்கும் விவசாயத்தைத் தொழிற்சாலையாக மாற்றுவதற்கும் உழைத்த வடக்கு-கிழக்கின் பொருளாதார வளங்களை அழித்துவிட்டு அதற்காக ஒரு வருத்தம்கூட தெரிவிக்காதவர்கள் இன்று வடக்கின் பொருளாதார அபிவிருத்தி குறித்து பேசுவது தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டுமே.

தென்னிலங்கை அரசியல் சக்திகளிடத்தில் அனைத்து தேசிய இனங்களையும் ஐக்கியப்படுத்தி நாட்டுப்பற்றுடன் இலங்கையை வளமிக்க நாடாக மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை.

நாட்டு மக்களை பிளவுபடுத்தி தமக்கான வாழ்வை பெற்றுக்கொள்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது ஜனாதிபதியின் அண்மைய வடமாகாண விஜயம் நிரூபித்துள்ளது.

வடகின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களை நடாத்துவதற்காகவும் ஏனைய சந்திப்புக்களை நிகழ்த்துவதற்காகவுமே ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விரிவான விசாரணை, இராணுவத்தினரிடமுள்ள காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவேண்டும், தமிழர் பிரதேசம் பௌத்த மயமாக்கல் மற்றும் 13 ஐ நடைமுறைப்படுத்தல் வேண்டும் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என ஜனாதிபதியின் வருகை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள் காணப்பட்டன.

ஆனால் ஜனாதிபதி விஜயத்தின்போது இது தொடர்பில் எந்தவிதமான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களையோ தெளிவுபடுத்தல்களையோ மேற்கொள்ளவில்லை.

2025ஆம் ஆண்டுக்குள் மீள்குடியேற்றம் முழுமைபெற வேண்டும் என்று கூறும் ஜனாதிபதி, காணிகளை விடுவிப்பதற்கான ஆக்கபூர்வமான அறிவுறுத்தல்களோ நடவடிக்கைகளோ எடுக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

இத்தகைய சூழ்நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் மீள்குடியேற்றங்கள் பூரணப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுகின்றது?

யதார்த்தங்கள் இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி குறிப்பிடுகின்ற வடமாகாண அபிவிருத்தி என்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை நாங்கள் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடுகள் அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் ஜனாதிபதி வலியுறுத்தி வருகின்றார்.

கடந்த காலங்களில் தென்பகுதியிலிருந்த தமிழ் மக்களின் பொருளாதாரம் அரசாங்கம் உருவாக்கிய இனக்கலவரங்களினால் நிர்மூலம் செய்யப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வார்த்தை ஜாலங்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு முயற்சியாகத் தென்படுகிறது.

ஜனாதிபதியின் தலைமையின் மீதும், அரசின் மீதும் நம்பிக்கை கொள்வதற்கு ஜனாதிபதி இடமளிக்கவில்லை. இதன்காரணமாகவே தமிழ் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்கும் சூழ்நிலைக்கு தமிழ் தரப்பி தள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin