பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயல்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் குறுக்கீட்டு கேள்வியொன்றை எழுப்பி உரையாற்றும் போது, ”பொது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு செலவுகள் உயர்ந்துள்ளன. குறிப்பாக வாழ்க்கைச் செலவுகள் மும்மடங்காக உயர்ந்துள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென கடந்த காலத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. அண்மையில் ஜனாதிபதியும் 1700 ரூபா சம்பள அதிகரிப்புக்கான கோரிக்கையை கம்பனிகளிடம் முன்வைத்திருந்தார். விரைவாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.” என வேலுகுமார் எம்.பி கூறினார்.
இதற்கு பதில் அளித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, ”தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள அரச தலைவர் ஒருவர் நேரடியாக தலையீடு செய்த முதல் சந்தர்ப்பமாக இது உள்ளது. நேற்றைய தினமும் முக்கிய பேச்சுவார்த்தையொன்று கம்பனிகளுடன் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் கம்பனிகளால் அதிகரிக்கக் கூடிய சம்பள தொகையை விரைவில் அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். அரசாங்கம் விரைவாக தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுக்கும்.” என்றார்.