வித்தியா கொலை வழக்கு: மேன்முறையீட்டு மனு ஜனவரியில் விசாரணை

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கடத்தல், கூட்டு வன்புணர்வு மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்மானித்தது.

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான சிங்கள மொழி பெயர்ப்பு பிரதிகளை சட்டமா அதிபரிடம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் என்று நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

2015 இல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற 18 வயது பாடசாலை மாணவியை கடத்தி, கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சுவிஸ் குமார் மற்றும் 07 பிரதிவாதிகளுக்கு 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு மரண தண்டனை விதித்தது.

தங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள விதம் சட்டத்திற்கு முரணானது என பிரதிவாதிகள் கூறுகின்றனர்.

இதன்படி, குற்றச்சாட்டில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin