வடமராட்சி பகுதியில் 84 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – வல்லிபுரம் காட்டு பகுதியில் இருந்து 84 கிலோ கஞ்சா போதைப்பொருள் காவல்துறை விசேட அதிரடி படையினரால் இன்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்த அதிரடி படையினர் , காட்டு பகுதிக்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கஞ்சா போதை பொருளை மீட்டனர்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் , மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை காவல்துறையினரிடம் அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் திங்கட்கிழமை 48 கிலோ அபின் போதைப்பொருளும், 28 கிலோ கேரள கஞ்சாவும் வல்லிபுரம் கடற்கரையில் இருந்து மீட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையாழ்ப்பணம், கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றைய தினம் திங்கட்கிழமை அவரது வீடு சுற்றிவளைகப்பட்டு, தேடுதல் நடத்தப்பட்டபோது குறித்த நபரின் வீட்டில் இருந்து 100 கிராம் கஞ்சாவும் 10 லீற்றர் கசிப்பும் 21 ஆயிரத்து 700 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, ஒரு கிராம் 800 மில்லி கிராம் கொண்ட கஞ்சாவை பொட்டலமாக கட்டி , அந்த பொட்டலத்தை 700 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல் துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin