பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா உலக சக்தியாக உருவெடுத்துள்ளது என்று சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சீனாவில் உள்ள பியூடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய இயக்குநர் சாங் ஜியோடாங், சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸில் இந்தியாவின் அரசியல், பொருளாதார மாற்றம் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலக அரங்கில் அடைந்த முக்கியத்துவம், அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்தியா தனக்கான சொந்த அடையாளத்தை உருவாக்கி வருவது குறித்தும் குறிப்பிட்டுள்ளது.
மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம், சமூகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தியா மிகுந்த தன்னம்பிக்கையுடனும் திட்டமிடலுடனும் உலக அரங்கில் வலம் வரத் தொடங்கியுள்ளது. பாரத் கதையாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. நகர்ப்புற கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. உலக நாடுகளுடனான உறவில் சரிசமமான இடத்தை இந்தியா அடைந்து வருகிறது.
சீனா – இந்தியா இடையிலான வர்த்தக உறவில் இந்தியாவின் அணுகுமுறை மாறியுள்ளது. முன்னதாக சீனாவின் இறக்குமதியை குறைப்பதில் இந்தியா கவனம் செலுத்தியது. தற்போது, தனது ஏற்றுமதியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
அரசியல் மற்றும் கலாச்சார தளத்தில் மேற்கத்திய நாடுகளின் தாக்கத்திலிருந்து விலகி இந்தியா அதன் சொந்த அடையாளத்தை நோக்கி நகரந்துள்ளது. அதாவது, இந்தியா அதன் காலனிய பாதிப்பிலிருந்து விடுபட்டு, சொந்த அடையாளத்தை வலுப்படுத்தி வருகிறது.
சர்வதேச உறவுகள்.. சர்வதேச உறவுகளிலும் இந்தியா மிகுந்த திட்டமிடலுடன் செயல்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா ஆகிய பல்வேறு சர்வதேச தரப்புகளுடன் நல்ல உறவை பராமரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வலுவான, உறுதிமிக்க தரப்பாக மாறியுள்ள இந்தியா, உலக அரங்கில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
சர்வதேச உறவில் குறுகியகால கட்டத்தில் இத்தகைய மாற்றம் மிக அரிதானது” என்று அவர் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.