இலங்கையில் தட்டம்மை தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதில் UNICEF சுகாதார அமைச்சுக்கு ஆதரவளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒன்பது மாவட்டங்களில் அமைந்துள்ள 1,600 இற்கும் மேற்பட்ட சிகிச்சை நிலையங்களில் முதற்கட்ட தடுப்பூசித் திட்டம் இன்று முதல் (06) ஆரம்பிக்கப்படுகிறது.
முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையான காலப்பகுதியில் அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்துவதனை உறுதிப்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கமைய கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பிறந்த குழந்தைகளுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை போன்ற அதிக ஆபத்துள்ள மாவட்டங்களில் இந்த அவசரநிலை வலியுறுத்தப்படுகிறது.
இதனிடையே, இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் உள்ள ஏனைய வயது சிறுவர்களை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இலங்கையில் 700 இற்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களில் 42 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் கம்பஹா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவானோர் பதிவாகியுள்ள நிலையில், களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, குருநாகல் மாவட்டங்களிலும் தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தட்டம்மை என்பது மோர்பில்லி வைரஸ் (Morbillivirus) இனத்தைச் சேர்ந்த பாராமிக்ஸோவைரடை (Paramyxoviridae) எனும் வைரஸால் ஏற்படும் தோற்று நோயாக கருதப்படுகிறது.
சுவாசக்குழாய் வழியாக உள்ளீர்க்கப்படும் வைரஸ் உட்கொள்ளப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நோய் அறிகுறிகளை ஏற்படுத்துவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இதன் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், குளிர் மற்றும் கண் சிவத்தல் என்பன பார்க்கப்படுகின்றன.
2019 ஆம் ஆண்டு அம்மை நோயை முற்றாக இல்லாதொழிக்க நாடாக இலங்கை பதிவு செய்யப்பட்டது. தெற்காசியாவில் அம்மை நோயை இல்லாதொழித்த ஐந்து நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகின்றது.
இருப்பினும், நான்கு வருடங்களின் பின்னர் இலங்கையில் தட்டம்மை நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் மீண்டும் பதிவாகும் அம்மை நோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனமும் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.