வங்கி கட்டமைப்புகள் சீர்குலைந்தால் நாடு பயங்கரமான அழிவுக்கு செல்லும் எனவும் ஒரு நாடு வங்கி கட்டமைப்பை பாதுகாக்க தவறினால் அந்த நாட்டின் அழிவை யாராலும் தடுக்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் எச்சரித்துள்ளார்.
அதனைவிடுத்து வெறுமனே பேசிக்கொண்டிருந்தால் பண வீக்கம், உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டுறவு சபையின் கீழான வெல்த் கோப் வங்கியின் இரண்டாவது கிளை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
இலங்கையின் 25 மாவட்டங்களில் இந்த கூட்டுறவு செயற்பாடுகள் சில பகுதிகளில் மிக உச்சத்திலே இருக்கின்றன. ஆனால் பல மாவட்டங்களில் மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையில் தான் காணப்படுகின்றது.
இந்த கூட்டுறவை வலுப்படுத்துவதன் ஊடாக நாட்டினுடைய பொருளாதாரத்தை மேல் நிலைக்கு கொண்டு வர முடியும்.
நாங்கள் உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிக்கின்ற போது நாட்டினுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்” என நம்பிக்கை வெளியிட்டார்.