நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு பொருளாதார நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்து அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளன என்றும், அடுத்த நான்கு காலாண்டுகளில் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேபோல், இவ்வருட இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 3% ஆக மேம்படுத்தவும், 2025 ஆம் ஆண்டில் 5% ஆக அதிகரித்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (04) நடைபெற்ற யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்தும் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும் என வட. மாகாண அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.
2025 ஆம் ஆண்டளவில் இடம்பெயர்ந்தவர்கள் என எவரும் இலங்கைக்குள் இருக்க கூடாதெனவும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை பெற்றுக்கொடுத்து அவர்களின் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, மீன்பிடித்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பீ.எம்.எஸ்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் ராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வடக்கு மாகாணத்துக்கான ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எம்.இளங்கோவன், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அம்பலவானன் சிவபாதசுந்தரன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்