கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட சிகிரியா/தம்புள்ளை மற்றும் திருகோணமலை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிலையான நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அது விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பிரகாரம்,
2019இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த வருடத்தில் திட்டத்தை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சீகிரியா / தம்புள்ளை மற்றும் திருகோணமலை நகரங்களில் அடையாளம் காணப்பட்ட இடங்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி இதன் கீழ் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய வருமானத்தை ஈட்ட முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மொத்த செலவு 1,045 மில்லியன் ரூபாவாகும். இந்த வருடத்திற்காக 320 மில்லியன் ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கான சில முக்கிய நோக்கங்கள் பற்றியும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாவை மேம்படுத்துதல், தொல்பொருள் நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல், பொருளாதார மேம்பாடு மற்றும் வருமானம் ஈட்டுதல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சிகிரியா / தம்புள்ளை மற்றும் திருகோணமலை நகரங்களில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு பங்குதாரர்களுடன் இணைந்து திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதனடிப்படையில், சீகிரியா/தம்புள்ளை திட்டத்திற்கான மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திருகோணமலை திட்டத்திற்கான திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஆகியவற்றின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.