வற் வரி திருத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக ஜனாதிபதி பணிக் குழாமின் தலைமை பணிப்பாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வரித் திருத்தங்கள் குறித்து பொய்யான அறிக்கைகளை வெளியிடும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து உண்மையாக பணியாற்ற வேண்டும். அரசும் மக்களுக்காக உண்மையாக பணியாற்ற வேண்டும். அதுதான் மிக முக்கியமான விடயம்.
இங்கு, அரசியலை இலக்காகக் கொண்டும் வாக்குகளை இலக்காகக் கொண்டும் செயல்படுகின்றனர். ஒரு நாடாகப் பணியாற்றப் போகிறோம் என்றால் அல்லது அரசாங்கமாகப் பணியாற்றப் போகிறோம் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
தவறு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். வற் வரி தொடர்பில் போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர். மக்களை தூண்டிவிட்டு குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என்றும் அவர் கூறினார்.