வற் வரி விலக்கு பட்டியலில் இருந்து கையடக்க தொலைபேசிகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து வற் வரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்படுகின்றது. இதனால், கையடக்க தொலைபேசி துறை கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10,000க்கும் மேற்பட்ட நேரடி வேலை வாய்ப்புகள் ஆபத்தில் இருக்கும் என்று கையடக்க தொலைபேசி மற்றும் பாகங்கள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வற் வரி அதிகரிப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை நல்ல பதில் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பாகங்களில் விலை அதிகரிப்பு காரணமாக சந்தையில் போலிப் பொருட்கள் அதிகரித்துள்ளது.
இதனால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானத்தை இழக்கும் அபாயம் காணப்படுவதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.