பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அண்மையில் விசேட இரகசிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டு முரண்பாடுகள் காரணமாக தற்போது சுயேற்சையாக செயற்படுபவர்கள் என கூறப்படுகின்றது.
இந்தச் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டதாக கூறப்படுகின்றது.
இதன்போது, தம்மிக்க பெரேராவுடன் தமது அரசியல் எதிர்காலம் குறித்து அவர்கள் கலந்துரையாடிய போதிலும் கலந்துரையாடலின் பெரும்பாலான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக தம்மிக்க பெரேராவின் பெயரும் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் வேட்பாளர் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கொழும்பு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
தமது ஆதரவை வலுப்படுத்திக்கொள்ள முக்கிய சந்திப்புகள் மற்றும் இரகசிய சந்திப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர கொழும்பில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.
அதேபோல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.