100 நாட்களை நிறைவு செய்த மயிலத்தமடு போராட்டம்

மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை நிலத்தை அரச அனுசரணையுடன் வலுக்கட்டாயமாக சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பால் பண்ணையாளர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று 100 நாட்களை நிறைவு செய்கிறது.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் பால் பண்ணையாளர்களினால் நடைபவனியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த மேய்ச்சல் தரை நிலத்துக்குள் சிங்கள விவசாயிகள் குழுவொன்று அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக விவசாயம் செய்து மாடுகளை கொன்றதாக பால் பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி முதல் இதுவரை 35 மாடுகள் இவ்வாறு பலியாகியுள்ளன.

இதனடிப்படையில், 136 மாடுகள் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 207 மாடுகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குறித்த சட்டவிரோத விவசாயிகள், கூரிய ஆயுதங்கள் கொண்டு மாடுகளை தாக்கி அதன் எச்சங்களை புல்வெளியில் வீசி செல்கின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளை அகற்றுமாறு ஏறாவூர் நீதிமன்றம் நவம்பர் 13ஆம் திகதி உத்தரவிட்டது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இந்த புல்வெளியில் இந்த விவசாயிகளால் 13 சிங்கள பிரஜைகள் சட்டவிரோதமாக விவசாயம் செய்து வந்தனர்.

அதை எதிர்த்து, கடந்த மாதம் செப்டம்பர் 22ம் திகதி இதே ஆணையம் இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.

இதனையடுத்து இந்த 13 விவசாயிகளும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 10ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அங்கு, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதரவான எந்த ஆதாரத்தையும் அதிகாரிகள் முன்வைக்கவில்லை.

இதனையடுத்து, இந்த 13 சட்டவிரோத விவசாயிகளும் அந்தந்த நிலத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.

ஆனால், இதுவரை அவர்கள் வெளியேற்றப்படவில்லை என, பால் பண்ணையாளர்கள் குற்றம் சாட்டினர். இந்த சட்டவிரோத விவசாயிகளின் தாக்குதல்களால் காயமடைந்த மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin