பாராளுமன்றத்திற்குள் சாதி வருத்தமளிக்கிறது: ப.சிதம்பரம்

பாராளுமன்றத்திற்குள் சாதி நுழைவது வருத்தமளிக்கிறது என மூத்த காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், எதிர் கட்சியினரால் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக நான் அவமதிக்கப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து ப.சிதம்பரம் இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளார்.

எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, ஜெகதீப் தங்கரை ஏளனமாகக் கிண்டலடித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பேசிய தன்கர், இது விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த எனக்கும், எனது ஜத் சமூகத்திற்கும் அளிக்கப்பட்ட அவமானம் எனக் கூறியிருந்தார்.

இதனையடுத்த தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், ‘பாராளுமன்றத்தில் முக்கிய விவாதத்திற்குள் சாதி நுழைவது வருத்தமளிக்கிறது. இதுவரை, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேலின் சாதியையோ, சிஎஃப் ஆன்ட்ரூஸ் அல்லது அன்னிபெசன்ட்டின் பிறந்த இடத்தைப் பற்றியோ யாரும் கேட்டதாக எனக்கு நினைவில்லை.

இந்த 21ஆம் நூற்றாண்டில் இதுபோன்ற அடையாளங்களிலிருந்து வெளியே வாருங்கள். மனிதநேயத்தின் மதிப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin