உலகத் தமிழர் பேரவை என்பது கூட்டமைப்பின் முகமூடியாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த உலகத்தமிழ் பேரவையின் முகமூடியாக சுமந்திரன் மற்றும் இரா.சம்பந்தன் இருக்கின்றனர்.
இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்ய பார்க்கின்றனர்.
அத்துடன், இலங்கை அரசை ஒரு நியாயமான அரசாக காட்டுவது மட்டும் தான் இவர்களது நோக்கமாகும். எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் பரபரப்பாக உலகத் தமிழர் பேரவை குறித்துப் பேசப்படுகின்றது.
இந்த நாடகத்தை இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் கூட்டாக இயக்குகின்றனர்.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மறைமுகமாக பாத்திரத்தை ஏற்று ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்கி, ஜனாதிபதி ரணிலை தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க கூடிய ஒருவராக உலகிற்கு காட்டுகின்றனர்.
இதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவைப்படுகின்ற நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஏமாற்று நாடகத்தை நடத்துகின்றனர்.
உலகத்தமிழ் பேரவையும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் கடந்த 14 வருடங்களில் குறைந்தது 12 வருடங்கள் ஒன்றாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும், பல இராஜதந்திர மட்டங்களுக்கும் சென்று தமிழ் மக்களின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கும் பல காரியங்களை செய்திருக்கின்றனர்.
குறிப்பாக சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக முடக்குகின்ற சுமந்திரனது செயற்பாடுகளுக்கு உலக தழிழர் பேரவை முழுமையாக பக்கபலமாக இருந்திருக்கின்றது.
இந்த நாடகங்களில் ஒன்று தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கை. இவர்களது சதிகள், துரோகங்கள் எல்லாம் இன்று அம்பலமாகி முழுமையாக நிராகரிக்கின்ற சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
எனவே உலகத் தமிழர் பேரவையின் ஆரம்ப கோரிக்கையே தமிழர்களை குழிதோண்டி புதைப்பதாகும், அதனை நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம்.
புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், உலகத்தமிழ் பேரவையை முழுமையாக நிராகரிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.