எட்டு நாடுகள் பங்குபற்றிய 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டத்தை பங்களாதேஷ் அணி வென்றுள்ளது.
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் 34 வருட வரலாற்றில் முதல் முறையாக பங்களாதேஷ் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
நான்கு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பங்களாதேஷ் இரண்டாவது தடவையாக 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் பங்களாதேஷ் 2020இல் 19 வயதுக்குட்பட்ட உலக சாம்பியனாகி இருந்த நிலையிலேயே இம்முறை ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
அதேபோன்று ஐக்கிய அரபு இராச்சியம் ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் தடவையாகும்.
சம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் அதிரடியாக ஆடிய அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி 129 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
மொெஹமட் ரிஸ்வான் 60 ஓட்டங்களையும், ஸ்லாம் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஐக்கிய அரபு இராச்சியம் சார்பில் ஹயுமன் ஹமெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
283 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் அணி பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதால் 87 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஒரே ஒரு வீரர் மாத்திரமே இரட்டை இலக்கத்தை தொட்டார். துருவ் பராசரர் 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், மருஃப் மிருதா மற்றும் ரோஹனத் டவுல்லா போர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.