மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரதேசத்திற்கு தமிழ் அரசியல்வாதிகள் செல்வதை தடுத்து அதன் ஊடாக இனவாதத்தினை தூண்டி தமிழர்களுடைய உரிமையை நசுக்க வகையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் காணப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பண்ணையாளர்கள் எதிர்நோக்கு மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக இன்றைய தினம் மயிலத்தமடு பகுதிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பொலிஸாரினால் திருப்பியனுப்பட்டனர். மேலும் குறித்த இடத்திற்கு அம்பிட்டிய சுமணரத்ன தேரரும் வருகை தந்திருந்தமையினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கட்சி தேசிய அமைப்பாளர் சுரேஸ் ஊடாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மயிலத்தமடு பகுதிக்கு செல்ல இருப்பதாக அறிவித்திருந்தோம். கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உரிய ஒத்துழைப்பை பொலிஸார் வழங்கவேண்டும் எனவும், ஜனாதிபதியின் செயலாளரின் அனுமதியும் பெறப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து ஜனாதிபதியின் செயலாளரிடம் வினவினேன். மயிலத்தமடு பகுதிக்கு செல்ல இருப்பதால் பொலிஸாருக்கு அனுமதி வழங்குமாறு கேட்டேன். அதற்கு ஜனாதிபதியின் செயலாளர் இலங்கை பிரஜை நாட்டில் எந்தவொரு பகுதிக்கு செல்ல உரிமை இருக்கு அதற்கு எவரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. அனுமதிபெற வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. எனவே அனுமதி பெறத் தேவையில்லை என தெரிவித்தார்.
இருப்பினும் எம்மை பொலிஸார் தடுக்கின்றனர் என தெரிவித்ததையடுத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் உதவி பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் ஊடாக ஒத்துழைப்பை வழங்குமாறு தெரிவிப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.
இந்த பின்புலத்திலேயே இன்று மயிலத்தமடு பகுதிக்கு சென்றோம். ஆனால் குறித்த பகுதியில் உள்ள காவல் அரண்பகுதியில் வீதியில் குறுக்கே நூறுக்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு எங்களை வழிமறித்தனர்.
ஜனாதிபதி செயலாளரின் அனுமதியின்றி குறித்த பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை என கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எழுத்து மூலமாக தெரிவித்தார்.
இதனையடுத்து ஜனாதிபதி செயலாளரை உடனடியாக தொடர்புகொண்டு விடயத்தை தெரியப்படுத்தினேன்.
மேலும் குறித்த பகுதிக்கு அம்பிட்டிய சுமணரட்ண தேரர் அவரது சகாக்களுடன் வருகை தந்திருந்தார். இவை அனைத்து செயற்பாடுகளும் திட்டமிட்டு இனக்கலவரத்தை தூண்டும் செயற்பாடாகவே அமைந்திருந்தது. இந்த செயற்பாடு அடிப்படை மனித உரிமை மீறலாகும்” என தெரிவித்தார்.