அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் தலைவராக ஹர்த்திக் பாண்டியா செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணியின் தலைவராக ரோகித் ஷர்மா செயற்பட்டு வந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஹர்த்திக் பாண்டியா தலைவராக செயற்படுவார் என அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடிய ஹர்த்திக் பாண்டியா, 2022ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட குஜராத் டைட்டனஸ் அணிக்கு தலைமையேற்று விளையாடினார்.
ஹரத்திக் பாண்டியா தலைமையில் விளையாடிய குஜராத் அணி முதல் அறிமுகத்திலேயே கிண்ணத்தை தனதாக்கியது. இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரிலும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் குஜராத் அணிக்காக விளையாடிய ஹர்த்திக் பாண்டியா அண்மையில் மீண்டும் மும்பை அணிக்கே திரும்பினார்.
இந்நிலையில், எதிர்காலத்தில் அணியை கட்டியெழுப்பும் நோக்கில் ஹர்த்திக் பாண்டியாவை தலைவராக நியமித்துள்ளதாக மும்பை அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
“ரோகித் ஷர்மாவின் சிறப்பான தலைமைத்துவத்திற்காக நாங்கள் அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், 2013 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் தலைவராக இருந்து வருகின்றார்.
அவர் பதவி வகித்த காலம் அசாதாரணமானது அல்ல. அவரது தலைமை அணிக்கு இணையற்ற வெற்றியைத் தந்துள்ளதுடன், அவரது இடத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல் வரலாற்றில் மிகச்சிறந்த தலைவர்களில் அவரும் ஒருவர்” என மும்பை அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.