யாழ். கைதடி கமநல சேவை நிலையப் பிரிவுக்குட்பட்ட கமக்கார அமைப்புகளை சேர்ந்த சிறு நெற்செய்கையாளர்களுக்கு ஜப்பானின் உதவியில் கிடைத்துள்ள யூரியா உரம் இலவசமாக விநியோகிக்கும் நடவடிக்கையானது இன்று புதன்கிழமை (13.12.2023) முதல் ஆரம்பமாவதாக, கமநல சேவை நிலைய பெரும்போக உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
30 பரப்புக்குட்பட்ட நெற்செய்கையாளர்களுக்கே கமநல சேவை நிலையங்களினூடாக உரம் விநியோகிக்கப்படுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோவிலாக்கண்டி, கைதடி நாவற்குழி, கைதடி நுணாவில் கமக்கார அமைப்புகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இன்று (13.12.2023) உரம் விநியோகிக்கப்படும்.
உர விநியோக தினங்கள்
மறவன்புலோ, தனங்கிளப்பு கமக்கார அமைப்புகளை சேர்ந்த விவசாயிகளுக்கு நாளை வியாழக்கிழமையும் தென் மட்டுவில், மட்டுவில் நுணாவில், மட்டுவில் மத்தி, சந்திரபுரம் கமக்கார அமைப்புகளை சேர்ந்த விவசாயிகளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் உரம் விநியோகிக்கப்படுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.
கைதடி கமநல சேவை நிலையத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை விவசாயிகள் உரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், ஏக்கர் வரி மற்றும் அடையாள அட்டையை காண்பித்து இதை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.