மட்டக்களப்பில் உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பு- காயன்கேணி பிரதேசத்தில் உள்ள காணியை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக குருக்கள்மட இராணுவ முகாம் தொடர்பில் மாவட்ட ரீதியில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அந்த பகுதியில் சிறியளவிலான பகுதியை பொது மக்களுக்கு கையளிப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதனை துரிதப்படுத்த அரசாங்கம் தீவிரம் காட்ட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத முறையில் சுவீகரிக்கப்பட்ட பல பகுதிகளில் இராணுவத்தினர் முகாம்கள் அமைத்துள்ளனர்.
இவ்வாறு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்து தருமாறு ஜனாதிபதியிடமும் பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இதுவரையில் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
எனவே, எமது மக்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க குறித்த இடங்களை ஆராய்வதற்கென குழு ஒன்றை அமைக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” என தெரிவித்தார்.